15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த தொகுதியான மாத்தறை மாவட்டத்தில் இருந்து கட்சி அரசியலில் ஈடுபட்டு பொதுப் பதவிக்கு போட்டியிட்டதே தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகளில் ஒன்று என இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘‘அரசியல் ஒருபோதும் கிரிக்கெட் வீரர்களின் அல்லது எந்த விளையாட்டு வீரரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாக இருக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,’’
‘‘இந்தப் பிரச்சினை குறித்து மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இத்தனை வருடங்களுக்கு முன்பு அரசியலில் நுழைந்ததன் மூலம், நான் தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் ஒரு பெரிய தவறு செய்தேன் என்று நம்புகிறேன்.
எல்லோரும் விளையாட்டை நேசிக்கிறார்கள். அந்த வகையில், முழு நாட்டாலும் போற்றப்படும் ஒரு விளையாட்டு வீரர் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தால், ரசிகர்கள் பிளவுபட்டு இருப்பார்கள். அதனால்தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை ரசிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். இப்போது நான் அரசியல் என்ற வார்த்தையைப் பற்றிப் பேசக்கூட விரும்பவில்லை, அதை நான் மிகவும் வெறுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சனத் ஜயசூர்ய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கத்தில் அஞ்சல் சேவைகள் துணை அமைச்சராகவும், பின்னர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ளாட்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துணை அமைச்சராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.